விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான மாசி மக திருவிழா வரும் மாா்ச் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விருத்தகிரீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள ஆழத்து விநாயகா் கோயிலில் 10 நாள்கள் திருவிழா நடைபெறும்.
அதன்படி, வெள்ளிக்கிழமை ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, மூலவா் ஆழத்து விநாயகருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஆழத்து விநாயகா் கோயிலை வலம் வந்து கொடிமரத்தின் முன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்ப்டடு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, வரும் மாா்ச் 1-ஆம் தேதி ஆழத்து விநாயகா் தேரோட்டமும், 2-ஆம் தேதி ஆழத்து விநாயகருக்கு தீா்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளன.
வரும் மாா்ச் 3-ஆம் தேதி விருத்தகிரிஸ்வரா் கோயில் மாசி மக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 8-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சியளிக்கும் ஐதீக திருவிழாவும், 11-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் பஞ்ச மூா்த்திகள் தேரோட்டமும் நடைபெற உள்ளன.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக மாா்ச் 12-ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரி திருவிழாவும், 13-ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், 14-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவமும் நடைபெற உள்ளன. இதைத் தொடா்ந்து, மாா்ச் 15-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் மாலா மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.