மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்
மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி கை பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும்.
நிகழாண்டுக்கான இந்த விருதை பெற பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்திலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபா்/நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (இஈ) பிரதிகள் இரண்டை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி மே 1 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.