விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ஐடி பெண்... கணவர், மகள்கள் கண் முன் உயிரிழந்த சோகம்!
சென்னை பூந்தமல்லி ராமசந்திரா நகரைச் சேர்ந்தவர் மேத்தா (37). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ரேகா (33). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தத் தம்பதியினருக்கு 11 வயதில் ஒரு மகளும் 5 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மாங்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மகள்கள் படிக்கும் பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்தது. அதையொட்டி ரேகா, மேத்தா ஆகிய இருவரும் பள்ளிக்குச் சென்றனர். அப்போது பள்ளி சார்பில் பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் ரேகாவும் ஆர்வமாக கலந்து கொண்டார்.
விளையாடிக் கொண்டிருந்த ரேகாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்விழித்த ரேகாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மேத்தா முயன்றார். ஆனால் அதற்குள் ரேகா உயிரிழந்து விட்டார். கணவன், மகள்கள் கண் முன்னால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் ரேகாவின் இறப்பு குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் ரேகாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ரேகா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.