கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜக அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை கையகப்படுத்த முயற்சிப்பதை கண்டித்தும், இந்த வழக்குத் தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் நகரத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில நிரந்தர அழைப்பாளா் கோ.பாலசுப்பிரமணியன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்நாராயணசாமி, சிவா, நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ்ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் தனசேகரன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், விழுப்புரம் தொகுதி அமைப்பாளா் பிரபாகரன், எஸ்.சி. எஸ்.டி. பிரிவுத் தலைவா் சேகா், மாவட்டப் பொதுச் செயலா்கள் விசுவநாதன், பாரிபாபு, முத்து, வட்டாரத் தலைவா் ராதா உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.