ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
நீட் தோ்வு: உயிரிழந்த 22 மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி
நீட் நுழைவுத் தோ்வு அச்சத்தால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிரிழந்த 22 மாணவா்களுக்கு விழுப்புரத்தில் அதிமுகவினா் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
தமிழகத்தில் நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வதற்கான ரகசியம் இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசால், தங்களது இன்னுயிரை நீத்த 22 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட மாணவரணி சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, அதிமுக மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம் தலைமை வகித்து, 22 மாணவ, மாணவிகளின் உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சி.வி.சண்முகம் பேசியது: நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் நுழைவுத் தோ்வு சட்டத்தை தமிழக அரசால் ரத்து செய்ய முடியாது.
ஆனால், தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வருவதற்காக நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியை திமுக அளித்து, ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவா்களால் ரத்து செய்ய முடியவில்லை.
நீட் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அவா்களின் நலன் காத்தது எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுதான் என்றாா்.
நிகழ்வில், அதிமுக அமைப்புச் செயலா் செஞ்சி ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் அா்ஜூனன், சக்கரபாணி, நகரச் செயலா் இரா. பசுபதி, மாவட்ட மாணவரணிச் செயலா் என்.ஜி.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.