பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!
விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்றனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வழக்கமான விற்பனை திங்கள்கிழமை முதல் நடைபெறத் தொடஙகியது.
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்செய்யப்படும் விளைபொருள்களுக்குரிய தொகையை இதுவரை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வங்கிக்கணக்கில் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், ஜூலை 30-ஆம் தேதி முதல் மறைமுக ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல், எள் உள்ளிட்ட பல்வேறு விளைபொருள்கள் ஏலம் நடைபெறவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கின.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விழுப்புரம் உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தர்னா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறு உத்தரவு வரும் வரை விவசாயிகள் விளைபொருள்களைக் கொண்டுவர வேண்டாம் என்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து வேளாண் விளைபொருள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணை ப்பாளர் ஆர்.குபேரன் தலைமையில் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலுவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, புதிய நடைமுறையால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை கைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் வேளாண் விற்பனை வாரிய ஆணையரைத் தொடர்புகொண்டு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களுக்குரிய தொகை விற்பனைக்கூட வங்கிக்கணக்கிலேயே செலுத்தும் பழைய நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். ஆணையரும் இதன்படி செயல்படுவதாகத் தெரிவித்தார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி
இதையடுத்து விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை காலை முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்றனர் என்று அனைத்து வேளாண் விளைபொருள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குபேரன் தெரிவித்தார்.
கடந்த 3 நாள்களாக ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்த விளைபொருள்கள் ஏலம் விடப்பட்டன. வியாபாரிகள் நெல், எள் உள்ளிட்ட பொருள்களை வாங்கினர். மாவட்டத்தில் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலம் வழக்கம் போல் நடைபெற்றது.