இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!
என்னை பட்டதாரி ஆக்கிய விகடன்! - என் வாழ்க்கையை மாற்றிய ஒரு மணிஆர்டர் | #நானும்விகடனும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
விகடனை வாசிக்க.. ஸாரி ..நேசிக்க ஆரம்பித்து 38 ஆண்டுகள் கடந்து விட்டன. நாளுக்கு நாள் ஈர்ப்பும் பற்றுதலும் அதிகமாகிக்கொண்டே தான் செல்கிறதே தவிர அணு அளவும் குறையவில்லை .
1986 ஆம் ஆண்டு கல்லூரியில் காலடி எடுத்து வைத்த போது என் பெற்றோர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை... வறுமையை கண்ணில் காட்டக்கூடாது என்று வசதியாக இலவச அரசு மாணவர் விடுதியில் சேர்த்து விட்டார்கள் . அவனாவது மூணு வேளை முழுசா சாப்பிடட்டும் என்று உறவுகளிடம் அவர்கள் சமாளித்தததை விடுமுறையில் செல்லும் போது அறிந்தவன்.
விடுதியில் நட்பு வட்டாரத்தில் அவ்வளவு எளிதாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை .. வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம் தனிமையும் வெறுமையும் என்னை வாட்டிய போது எனக்கு கிடைத்த போதி மரம் தான் கல்லூரி நூலகம்.
அப்படி கல்லூரி நூலகத்தில் அறிமுகமானது தான் ஆனந்த விகடனும் , ஜூனியர் விகடனும்.

ஆவியும் ஜூவியும் படித்து படித்து எனக்கும் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட துணுக்குகள் , வாசகர் கடிதம் என்று தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன்.
ஒருமுறை காந்தியடிகள் பிறந்த நாளின் போது , ஜூவியில்" காந்திஜி கவிதை போட்டி" குறித்த அறிவிப்பு வந்தது . சரி நாமும் பங்கேற்போம் என்று பதினைந்து பைசா அஞ்சல் அட்டையில் கவிதை எழுதி அனுப்பினேன்.
நிற்க..
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று வறுமை மட்டுமே வழி நெடுகிலும் பின் தொடர்ந்ததால் கல்லூரியில் கட்ட வேண்டிய கட்டணங்கள் கூட என்னாலயோ , என் குடும்பத்தாலயோ சரியான நேரத்தில் கட்ட முடியாமல் கல்லூரியில் இருந்து என்னை வெளியில் அனுப்பிய சம்பவங்களும் உண்டு .அப்படி ஒரு முறை பல்கலைக்கழக தேர்வு கட்டணமாக 87 ரூபாய் கட்ட கடைசி நாள். அவ்வளவாக தொடர்பு சாதனங்கள் இல்லாத கால கட்டம் . ஒரு மாதத்திற்கு முன்பே பெற்றோர்களிடம் தேர்வு கட்டணம் குறித்து சொல்லியும் அவர்களாலும் ஏற்பாடு செய்ய முடியாத கடினமான காலகட்டம் .
தேர்வு கட்டணம் செலுத்த அன்றைய தினம் தான் கடைசி நாள் என்பதால் வகுப்பு பாதியில் என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள். கவலையும் கண்ணீருமாக வெளியில் வந்து ஒரு கைப்பிடி சுவற்றின் மீது அமர்ந்து சாலையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

பெற்றோர்கள் வர மாட்டார்களா அல்லது யாராவது தேர்வு கட்டணம் செலுத்த பணத்தை கொண்டு வந்து தருவார்களா , இன்று பணம் கட்டாவிடில் என்னுடைய பட்டப்படிப்பு பாதியில் நிற்குமே என்று கவலையுடன் நுழைவு வாயில் அருகே அமர்ந்து கொண்டு இருந்தேன் .
அப்போது என்னை நோக்கி வந்த அஞ்சலக ஊழியர் ஓருவர் , பயோ கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட் எங்க இருக்கு தம்பி என்று கேட்டார்.
யார் சார் வேணும் உங்களுக்கு , நானும் பயோ கெமிஸ்ட்ரி தான் என்று சொன்னேன்.
மேதாவி என்ற மாணவருக்கு மணியாடர் வந்து இருக்கு... அவரிடம் கொடுக்க வேண்டும் என்றார் அஞ்சலக ஊழியர் . சார் நான் தான் மேதாவி , எக்ஸாம் பீஸ் கட்ட வீட்டிலிருந்து அனுப்பி இருப்பார்கள் என்று சொன்னதும் , இல்லை இது ஜூனியர் விகடனில் இருந்து வந்திருக்கு என்று சொல்லி நான் பொய் சொல்வதாக நினைத்து விட்டார் .
நான் தான் மேதாவி என்று எத்தனையோ முறை சொல்லியும் கடைசி வரை நம்பாமல் அருகில் இருந்த தமிழ்த்துறையின் அப்போதை தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களிடம் அழைத்து சென்றேன் ..கவிக்கோ அவர்களின் மாணவன் என்பதால் எனக்கு நன்கு அறிமுகம் , தம்பி.. அவர் தான்பா மேதாவி எங்கிருந்து மணியாடர் வந்திருக்கு.. என்று விசாரித்து பணத்தை பெற்று கொடுத்தார்
மணியார்டர் படிவத்தில் , தகவல் தெரிவுக்கும் பகுதியில் ,
"காந்திஜி கவிதை போட்டியில் தங்கள் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறுதல் பரிசாக ருபாய் 100 சன்மானம் பெறுகிறது "என்று கையொப்பமிட்டு ஜூனியர் விகடனில் இருந்து வந்த தகவலை அறிந்து கவிக்கோ பாராட்டி கையில் பணத்தை கொடுத்தார் .
சரி .. நின்ற இடத்தில் இருந்து மீண்டும் வருவோம் ..
ஆச்சரியத்தின் உச்சத்திலும் பணம் கிடைத்த சந்தோஷத்தில் நேராக ஓடிப்போய் தேர்வு கட்டணத்தை செலுத்தினேன் . தேர்வு எழுதினேன் ..பட்டதாரி ஆனேன் .
தேர்வு கட்டணம் செலுத்த சில மணி நேரங்களே இருந்த நிலையில் பணத்திற்க்கு வழி இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்தபோது ஜூனியர் விகடன் கவிதை போட்டியில் கிடைத்த அந்த 100 ரூபாய் அன்பளிப்பு என் வாழ்க்கையே மாற்றியமைத்து விட்டது.
1987 - 88 களில் நடந்த இந்த சம்பவம் . ஒவ்வொரு ஆண்டு காந்தி ஜெயந்திக்கும் நினைவு வரும் .. விகடனை பற்றி பேசும்போது இதை குறிப்பிடாமல் கடந்து போக முடிவதில்லை.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
என்ற வள்ளுவனின் வாக்குப்படி , என்னை பட்டதாரி ஆக்கிய விகடனுக்கு
இன்றுவரை நன்றி உடையவனாக இருந்து வருகிறேன் .
பூநசி.மேதாவி
விகடன் இதழுடன் உங்களுக்கு இருக்கும் பந்தம் குறித்து எழுத ஓர் அரிய வாய்ப்பு!
ஏறக்குறைய 100 ஆண்டுகளாக, தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு நீங்காத அங்கமாக விகடன் திகழ்ந்து வருகிறது. பொழுதுபோக்கு, அரசியல், சமூகச் செய்திகள் எனப் பல தளங்களில் விகடன் வாசகர்களின் எண்ணங்களை வளப்படுத்தி வருகிறது. உங்கள் நினைவுகளிலும், வாழ்க்கைப் பயணத்திலும் விகடனின் பங்கு என்ன? விகடன் இதழ் உங்கள் குடும்பத்தில் ஒருவராய்ப் பார்க்கப்பட்ட தருணங்கள் உண்டா? ஒரு செய்தியோ, ஒரு கட்டுரையோ, ஒரு புகைப்படமோ உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
இப்படியான உங்கள் அனுபவங்களை "விகடனும் நானும்" என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதி அனுப்பலாம். கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கட்டுரையின் நீளம் 500 முதல் 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
உங்கள் கட்டுரைகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
வாசகர்களாகிய உங்களுக்கு வேள்பாரி எவ்வளவு பிடிக்கும்?, 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலில் உங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் எது?, உங்கள் மனதை அதிகம் பாதித்த காட்சி எது?, காதல், வீரம், ஓவியம், மொழி வளம், தமிழர் அறம், மாண்பு இப்படி பல அற்புதங்கள் அடங்கிய இந்தப் படைப்பில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?
உங்கள் கட்டுரை 600-800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். உங்களது கட்டுரையை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நினைவில் கொள்க:
ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கிறது.
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
