செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் வடியாத வெள்ளம்: நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்!

post image

விழுப்புரம்: வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் திங்கள்கிழமைவரை வெள்ளம் வடியாத நிலை காரணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

88 நிவாரண மையங்களில் 5,694 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்களில் மூழ்கியதால் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பதற்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்யத் தொடங்கிய மழை (சனிக்கிழமை பிற்பகல்), கரையைக் கடந்த பின்னரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது.

விழுப்புரம் பாண்டியன் நகர் பகுதியில் குடியிருப்புகளைச் சூழ்ந்து தேங்கி வெளியேறாமல் திங்கள்கிழமை காணப்பட்ட வெள்ளநீர்.

மாவட்டத்தில் விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், மயிலம், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், முகையூர், மணம்பூண்டி, கெடாகாணை, செஞ்சி, மேல்மலையனூர் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளை சூழ்ந்தது.

குறிப்பாக விரிவாக்கப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். பல குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டதால் அங்குள்ள மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். மாவட்டத்தில் 88 மையங்களில் 5,684 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, உளளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

கெடாரில் 419 மி.மீ. மழை:

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கெடாரில் 419 மி.மீ. மழை பதிவாகியது. சூரப்பட்டில் 383, விழுப்புரத்தில் 348 மி.மீ., கோலியனூரில் 320, முகையூரில் 302, நேமூரில் 295, கஞ்சனூர், மணம்பூண்டியில் 285 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 3,885 மி.மீ. மழையும், சராசரியாக 185 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வடியாத வெள்ளநீர்:

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்வது நின்ற நிலையிலும் வெள்ளநீர் வடியவில்லை. குறிப்பாக விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகள், விரிவாக்கப் பகுதிகள், திண்டிவனம் போன்ற மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள வெள்ளநீர் வடியாத நிலையே காணப்படுகிறது.

இந்த இடங்களிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தங்க வைக்கும் பணியை பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் நகரில் பிற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பணியாளர்களைக் கொண்டு மோட்டார் மூலம் வெள்ளநீரை வடிய வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய வெள்ளநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

போக்குவரத்து துண்டிப்பு:

மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வெள்ளநீர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் சாலையைக் கடந்து பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால் திருச்சிக்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர், சாலை வழியாகவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் புறவழிச்சாலை வழியாக பண்ருட்டி வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இதுபோல திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் கெடாரில் சாலை துண்டிக்கப்பட்டதால் அந்த வழியாகவும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் காணை, மாம்பபழப்பட்டு வழியாக அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் வரை செல்லும் சாலையிலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று செஞ்சி சாலையிலும் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை சாலையில் திண்டிவனம், ஓங்கூர் வரை பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கும்பகோணம்-விக்கிரவாண்டி சாலை பம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்தது துண்டிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்:

விழுப்புரம் மாவட்டத்தின் வளவனூர், குச்சிப்பாளையம், அறம்பிச்சம்பாளையம், விழுப்புரம் நகரின் பாண்டியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர்வடிய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, நிவாரண முகாம்கள் அமைக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அரசு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்விடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனர்.

மாவட்டத்தில் 7 பேர் உயிரிழப்பு:

புயல்பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு கோடி கிராமம், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ராமசாமி மகனான சக்திவேல் (45), ஞாயிற்றுக்கிழமை தும்பூர் ஏரியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

மேலும், வளவனூர் காவல் நிலையத்துக்குள்பட்ட தொந்திரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பா. சிவக்குமார் (50), செல்லாற்றங்கரை ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். விழுப்புரம் அயினாம்பாளையம் பகுதியில் வெள்ளநீரில் மூதாட்டி குப்பம்மாள் (70) அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதைத் தவிர காணை, கஞ்சனூர் என மாவட்டத்தின் பிற பகுதிகளில் சேர்த்து மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிக்க: வெள்ளநீரில் மிதக்கும் விழுப்புரம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

விழுப்புரம் மாவட்டம், காணைக்குப்பம் பகுதியில் நெற்பயிர்களைச் சூழ்ந்து காணப்படும் வெள்ளநீர்.

54,250 கோழிகள் பலி:

மாவட்டத்தில் வெள்ளநீர் சூழ்ந்தது, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது உள்ளிட்டகாரணங்களால் 25 மாடுகள்,14 கன்றுக்குட்டிகள், 58 ஆடுகள் உயிரிழந்தன. இதுபோல, கோழிப்பண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்த நிலையில் , மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 54,250 கோழிகள் இறந்தன.

150 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்களில் வெள்ளநீர் மூழ்கியதால் 150-கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளநீர் வடியாத காரணத்தாலும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (டிச.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய சுற்றுலாவிற்கு ஏற்றயிடமாக மேற்கு வங்கம் தேர்வு: மமதா புகழாரம்

கொல்கத்தா: பாரம்பரிய சுற்றுலாவிற்கு தகுதிவாய்ந்த இடமாக மேற்கு வங்கத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளதாகவும் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தின் சுற்றுலா துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் முதல்வர் மமதா பான... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிச. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளன. பெரும்... மேலும் பார்க்க

வெள்ளநீரில் மிதக்கும் விழுப்புரம்! மீட்புப்பணிகள் தீவிரம்!

விழுப்புரம்: ஃபென்ஜால் புயல் காரணமாக, கொட்டித் தீர்த்த மழையால் விழுப்புரம் நகரிலும், நகரையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.இந... மேலும் பார்க்க

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 4 மாணவர்களுக்கு ஜாமீன்!

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கண்காணித்து சீரமைத்திட பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:ஃப... மேலும் பார்க்க

எச்சரிக்கை! ஒகேனக்கல், சிறுவாணி அணை செல்வோர் கவனத்துக்கு...

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஒகேனக்கல், சிறுவாணி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்குச் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க