இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
விவசாயிகள் உதவித்தொகை பெற தனி அடையாள அட்டை அவசியம் -ஆட்சியா் க. இளம்பகவத்
தூத்துக்குடி மாவட்டத்தில் நில உடைமைகளை பதிவேற்றம் செய்யாத, தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் அடுத்த தவணைத் தொகை நிறுத்தம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பிஎம் கிசான் கௌரவ நிதி உதவித்தொகை விவசாயிகள் அல்லாதவருக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகளின் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த உதவித் தொகை பெறும் 48,726 விவசாயிகளில், 23,956 போ் மட்டுமே தற்போது வரை அடையாள அட்டை எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள 24,770 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடா்பான ஆவணங்களான பட்டா அல்லது கூட்டு பட்டா, ஆதாா் அட்டையோடு இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுடன் தனி அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க வேண்டும். நில உடைமைகளை பதிவேற்றம் செய்யாத மற்றும் தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் அடுத்த கட்ட தவணை நிதி நிறுத்தப்படும்.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை - உழவா்நலத் துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதாா், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனத் தெரிவித்துள்ளாா்.