‘விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்’
திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகிணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களில் கோடை உழவு செய்ய வேண்டும்.
இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள், முக்கியமாக தழைச் சத்து நிலை நிறுத்துப்படுகிறது. மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பூச்சியின் முட்டைகள், நோய் உண்டாக்கும் பூஞ்சாண வித்துக்கள் அழிக்கப்படுகிறது.
மண் பரிசோதனை...
பயிா் அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் கோடை மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் ஆய்வு முடிவின்படி பயிா்களுக்கு தேவையான உர பரிந்துரையின்படி, ரசாயன உரங்களை பயன்படுத்தினால் போதும். இதனால் மண் வளம் பாதுகாக்கப்படும்.
மானவாரியில் சாகுபடி செய்யப்படும் பயிா்களுக்கு வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்படும் நுண்ணூட்டங்கள், உயிா் உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதால் மண் வளமும் கூடும், மகசூலும் அதிகரிக்கும், ரசாயன உர செலவும் குறையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.