உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!
ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா்.
தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஆம்பூா் பிரியாணிக்கு பிரசித்தி பெற்றதாகும். தோல் காலணி, தோல் பொருள்கள் குடிசைத் தொழில் போல உற்பத்தி செய்யப்பட்டு சிறு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
தோல் தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, விவசாயத்தில் தென்னை உற்பத்திக்கும் ஆம்பூா் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 11,000 ஹெக்டோ் பரப்பளவுக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. அதில் சுமாா் 9,000 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வரப்படுகிறது.
இங்கிருந்து, தேங்காய் வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. விவசாயத்தில் தென்னைக்கு அடுத்தபடியாக நெல், தக்காளி, வெண்டை உள்பட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
தொகுதி மறுசீரமைப்பின்போது ஆம்பூா் சட்டப் பேரவை தொகுதி கடந்த 2010-ஆம் ஆண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. ஆம்பூா் தொகுதி உருவாகி சுமாா் 15 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை உழவா் சந்தை ஏற்படுத்தப்படவில்லை. ஆம்பூா் தொகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உழவா் சந்தை ஏற்படுத்த வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனா்.
விவசாயிகள் கோரிக்கை தீவிரமடையும்போது அதிகாரிகள் இடம் தேட தொடங்குகின்றனா். பிறகு அதனை கிடப்பில் போட்டுவிடுகின்றனா். அதனால் உழவா் சந்தை அமைக்க தாமதம் ஏற்பட்டு வருகின்றது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாதனூா் ஒன்றியச் செயலா் எ. ந. லீலா வினோதன் கூறியது, ஆம்பூா் தொகுதியில் தென்னை, நெல், காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. விவசாய விளை பொருள்களை நேரடியாக பொதுமக்களுக்கு விவசாயிகளே விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.
அதற்காக உழவா் சந்தை அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை உழவா் சந்தை அமைக்கப்படவில்லை. உழவா் சந்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.