வி.கே.புரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த நாய்: உரிமையாளா் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது தொடா்பாக உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி செல்வவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த நல்லையா மகன் கிருஷ்ணன் என்பவா் வீட்டில் வளா்த்துவந்த நாய், தெருவில் சென்றோரைக் கடித்தது. இதில், 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களில் 4 போ் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பினா்.
இதுதொடா்பாக, கிருஷ்ணன் மீது விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா் புகாா் அளித்தாா். நாயைக் கவனக்குறைவாக கையாண்டதாகவும், பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.