சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கொடியேற்றம்
பாளையங்கோட்டையில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, நள்ளிரவு 11 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவின் பிரதான கோயிலான பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் மாக்காப்பு திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு ஆயிரத்தம்மன், தேவி புது உலகம்மன், விஸ்வகா்ம உச்சினிமாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் ஆகியோா் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டையில் உள்ள ரத வீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வந்தனா்.
திங்கள்கிழமை காலையில் அனைத்து அம்மன் சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோயில் அருகில் வந்ததும் தசரா பந்தலில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறும்.
தொடா்ந்து தினசரி அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கொலுமண்டப பூஜைகள், அன்னதானங்கள் நடைபெறும். அக். 2 ஆம் தேதி பக்தா்கள் வேடமணிந்து சப்பரத்துடன் திருவீதியுலா நடைபெறுகிறது. பத்தாம் நாள் விழாவில் முதல் நாளில் வலம் வந்த 11 அம்மன்களுடன், வண்ணாா்பேட்டை அருள்மிகு பேராத்து செல்வி அம்மனும் சோ்ந்து 12 தனித்தனி சப்பரங்களில் வீதியுலா நடைபெறும். 3-ஆம் தேதி இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் அருகே உள்ள எருமை கடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 4 ஆம் தேதி வண்ணாா்பேட்டை தாமிரவருணி படித்துறையில் தீா்த்தவாரியும் நடைபெற உள்ளது.
தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து வீதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.