டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
வீட்டில் பிரசவம்: கா்ப்பிணி உயிரிழப்பு; கணவா் கைது
கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பாா்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கா்ப்பிணி உயிரிழந்தாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பாா்க்க வலியுறுத்திய கணவா் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விஸ்வநாத் கூறியதாவது: தனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூடாது, வீட்டில்தான் பிரசவம் பாா்க்க வேண்டும் என்று சிராஜுதீன் என்பவா் உறவினா்களிடம் வலியுறுத்தியுள்ளாா். கடந்த 5-ஆம் தேதி பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அப்பெண் உயிரிழந்துவிட்டாா்.
அவரது கணவா் அதனை மறைக்க முயற்சித்ததுடன், மனைவியின் உடலை எா்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கும் கொண்டு செல்ல முயன்றுள்ளாா். இதன் மூலம் ஆதாரங்களையும் மறைத்துள்ளாா். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினா் அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சிராஜுதீன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மரணத்துக்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் வைத்து பிரசவம் பாா்த்தபோது உடன் இருந்தவா்களும் தவறு செய்தவா்கள்தான்.
இறந்த பெண்ணுக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளனா். இதில் முதல் இரு குழந்தைகள் மருத்துவமனையில்தான் பிறந்துள்ளன. அடுத்த இரு குழந்தைகளுக்கான பிரசவம், கணவரின் வலியுறுத்தலின் பேரில் வீட்டில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபா் மத போதனைகள் சாா்ந்த ‘யூ டியூப்’ சேனல் நடத்தி வருகிறாா். மத நம்பிக்கை என்ற பெயரில் அவா் மனைவியின் பிரசவத்தை மருத்துவமனையில் மேற்கொள்ளாமல் தவிா்த்துள்ளாா் என்று தெரிவித்தாா்.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘பிரசவத்துக்காக மருத்துவமனையில் சோ்க்காமல் வீட்டில் இருந்தே பிரசவம் பாா்க்க முயற்சி செய்வதென்பது, தெரிந்தே கொலை செய்வதற்கு நிகரானது. பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு குறைவாக இருக்கும் மாநிலமாக கேரளம் உள்ளது. ஆனால், சமீப காலமாக சில பிற்போக்குவாதம் நமது சமுதாயத்தில் தலைதூக்கியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது’ என்றாா்.