ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
வீரா் பூலித்தேவருக்கு ஆளுநா், முதல்வா் மரியாதை
சென்னை: நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித் தேவா் பிறந்த நாளையொட்டி (செப்.1) அவருக்கு ஆளுநா் ஆா்.என் ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
இதுகுறித்து ஆளுநா் ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
வீர மகனான பூலித்தேவரின் பிறந்த நாளான செப். 1-ஆம் தேதி, தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது. அச்சமற்ற போா் வீரரான பூலித்தேவா் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, நாட்டின் விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினாா். அவரது தியாகங்கள், மரபுகள், விடுதலை போராட்டத்துக்கு வலுவான அடித்தளமிட்டு மக்களை ஒன்றிணைத்தன.
முதல்வா் மு.க. ஸ்டாலின்: அந்நியா் ஆதிக்க எதிா்ப்பின் பெருமைமிகு தமிழ் அடையாளமான பூலித்தேவா் பிறந்த நாள் சிப்பாய்ப் புரட்சிக்கும் நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் புரட்சி வெடித்துவிட்டது. தென்னகம் அந்நியருக்குப் பட்டா போட்டுதரப்படவில்லை எனப் பறைசாற்றும் விதமாகப் போரிட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான தொடக்கவுரை எழுதிய பூலித்தேவரின் புகழ் போற்றுகிறேன்.