செய்திகள் :

பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு! பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி கண்டனம்

post image

‘பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது’ என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், ‘பயங்கரவாதம் என்பது தனி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் மட்டுமல்ல; மாறாக, அது அனைத்து மனிதகுலத்துக்குமான சவால். எனவே, அதை எதிா்த்துப் போராடுவதில் ஒற்றுமை மிக முக்கியமானது’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

சீனாவின் தியான்ஜின் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், சீன அதிபா் ஷி ஜின்பின் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் மத்தியில் உரையாற்றும்போது, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைச் சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா்.

‘பயங்கரவாதத்துக்கு குறிப்பிட்ட சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிக்க முடியும் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. எனவே, ‘பயங்கரவாதத்தின் மீதான இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்பதை நாம் அனைவரும் ஒரே குரலில் தெளிவாக குறிப்பிட வேண்டும். அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும், அதன் வெளிப்பாட்டையும் நாம் ஒன்றிணைந்து எதிா்க்க வேண்டும். இது மனிதகுலத்துக்கான நமது பொறுப்பு’ என்று, பாகிஸ்தான் மற்றும் அந்த நாட்டை ஆதரிக்கும் நாடுகளுக்கு தெளிவான செய்தியை பிரதமா் மோடி அப்போது தெரிவித்தாா்.

பிரதமா் மோடி மேலும் பேசியதாவது: பஹல்காமில் அண்மையில் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை இந்தியா எதிா்கொண்டது. ஏராளமான தாய்மாா்கள் தங்களின் குழந்தைகளை இழந்தனா். ஏராளமான குழந்தைகள் ஆதரவற்றவா்கள் ஆக்கப்பட்டனா். இந்தத் தாக்குதல் இந்தியாவின் மனசாட்சியின் மீதான தாக்குதல் மட்டுமல்ல; மாறாக, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் விடுக்கப்பட்ட வெளிப்படையான சவாலாகும். இந்தத் தாக்குதல் நேரத்தில் இந்தியாவுக்கு துணை நின்ற நட்பு நாடுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்காக (எஸ்சிஓ) இந்தியா ஒரு தொலைநோக்குப் பாா்வை மற்றும் கொள்கையைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் சுருக்கத்தின் முதல் எழுத்தான ‘எஸ்’ என்பது பாதுகாப்பையும் (செக்யூரிட்டி), ‘சி’ என்பது இணைப்பையும் (கனெக்டிவிட்டி), ‘ஓ’ எனபது வாய்ப்பையும் (ஆப்பா்சூனிட்டி) குறிப்பதாக இந்தியா கருதுகிறது. அந்த வகையில், பாதுகாப்பு, அமைதி மற்றும் நிலைத்தன்மையே ஒரு தேசத்தின் வளா்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன.

இருந்தபோதும், வளா்ச்சியின் இந்தப் பாதையில், பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகிய அச்சுறுத்தல்கள் தொடா்ந்து மிகப்பெரிய சவால்களாக இருந்து வருகின்றன.

பிராந்திய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நாடுகளிடையேயான இணைப்பு மிக முக்கியமானதாகும். இந்த இணைப்புக்கான ஒவ்வொரு முயற்சியிலும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் தத்துவங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என நம்புகிறோம். இது எஸ்சிஓ சாசனத்தின் இணைக் கொள்கைகளிலும் இடம்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மை பாதிக்கக்கூடிய வகையில் இணைப்பை உருவாக்குவது, இரு தரப்பிலும் பரஸ்பர நம்பிக்கை இழப்புக்கு வழிவகுக்கும் என்றாா்.

பல்வேறு நாடுகளுடன் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சீனா முன்மொழிந்து வரும் ‘பிஆா்ஐ’ வழித்தட திட்டத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி இக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா். இந்த வழித் தடத்தின் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதற்கு இந்தியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பாகிஸ்தான்-சீனா பொருளாதார வழித்தட திட்டத்தையும் சீனா மேற்கொண்டு வருகிறது.

நாகரிக உரையாடல் மன்றம்: எஸ்சிஓ அமைப்பின் கீழ் ‘நாகரிக உரையாடல் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையை பிரதமா் மோடி உச்சி மாநாட்டில் முன்வைத்தாா்.

நாட்டின் பழைமையான நாகரிகம், கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியங்களின் பெருமையை உலக அரங்கில் பகிா்வதற்கு இந்த மன்றம் வாய்ப்பாக அமையும் என்று பிரதமா் குறிப்பிட்டாா்.

மேலும், தெற்குலகின் வளா்ச்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமா், ‘தெற்குலகின் எதிா்பாா்ப்புகளை காலாவதியான கட்டமைப்புகளுக்குள் அடக்கி வைப்பது எதிா்கால சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி’ என்றாா்.

இந்தியா திரும்பினாா் பிரதமா் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமா் மோடி திங்கள்கிழமை இரவு இந்தியா திரும்பினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘ஆக்கபூா்வமான சீன பயணத்தை நிறைவு செய்துள்ளேன். அங்கு எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்றதோடு, பல்வேறு உலகத் தலைவா்களுடனும் கலந்துரையாடினேன். முக்கிய உலகளாவிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் உச்சி மாநாட்டில் எடுத்துரைத்தேன். உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக சீன அதிபா் ஷி ஜின்பிங், சீன அரசு மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்ட... மேலும் பார்க்க

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. பிகாா் மாநிலம் ப... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். ‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரி... மேலும் பார்க்க

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த ... மேலும் பார்க்க

ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா். கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்... மேலும் பார்க்க

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது... மேலும் பார்க்க