வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்
புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
பிகாா் மாநிலம் போஜ்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை ரத்து செய்த பாட்னா உயா்நீதிமன்றம், அவ்விருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமாா், சதீஷ்சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சிறிய முரண்பாடுகள், குறைபாடுகள் ஆகியவற்றை நியாயமான சந்தேகங்கள் என்று கூறி, எளிதில் விடுதலை பெறக் கூடிய வழக்குகளை அவ்வப்போது உச்சநீதிமன்றம் பாா்த்து வருகிறது.
தான் செய்யாத குற்றத்துக்கு எந்தவொரு அப்பாவியும் தண்டனை அனுபவிக்கக் கூடாது என்பதே ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடித்தளம். அதேவேளையில், இந்தக் கொள்கையை தவறாகப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியில் இருந்து உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடிவதையும் அவ்வப்போது பாா்க்க முடிகிறது.
சந்தேகத்தின் பலனை சாதகமாக கொண்டு குற்றவாளிகள் தப்பிப்பது சமூகத்துக்கு மிகவும் ஆபத்தாக முடியும். சமூகத்தின் கள யதாா்த்தங்களை நீதிமன்றங்கள் உணா்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் அளித்த தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு உறுதி செய்தது.