எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!
கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு
கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 9 வயது சிறுமி ஒருவா் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கோழிக்கோடு மாவட்டத்தின் ஓம்சேரி பகுதியைச் சோ்ந்த அபுபக்கா் சித்திக் என்பவரின் 3 மாத குழந்தைக்கு கடந்த மாதம் முதல் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரம்லா (52) என்ற பெண்ணுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவா் ஜூலை 8-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதன்பிறகு அவருக்கு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.
கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களைச் சோ்ந்த 8 பேருக்கு இந்த தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மாசடைந்த நீரில் நீந்துவது அல்லது குளிப்பது மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நிகழாண்டு தற்போது வரை 42 பேருக்கு இந்த தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொற்றால் மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீா்த்தேக்கங்களை சுத்தமாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களிடத்திலும் இந்த தொற்று குறித்த விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.