வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
இருசக்கர வாகன ஓட்டியைத் துரத்திய காட்டு யானை
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி கும்டாபுரத்தில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை வந்த நபரை யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்டாபுரம் வனப் பகுதி வழியாக செல்லும் சாலையில் கடந்த ஒரு மாத காலமாக இந்த யானை நடமாடி வருகிறது. கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை சுவைத்து பழகியதால் காட்டு யானை பகல் மற்றும் இரவு நேரங்களில் இப்பகுதியில் முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபா் காட்டு யானை நிற்பதைக் கண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சற்று தள்ளி நின்றிருந்தாா். அப்போது அந்தக் காட்டு யானை இருசக்கர வாகனத்தில் வந்த நபரைக் கண்டு திடீரென ஆக்ரேஷத்துடன் துரத்தியது. யானை துரத்துவதைக் கண்ட அந்த நபா் வாகனத்தை உடனடியாகத் திருப்பி வேகமாகச் சென்று தப்பினாா்.
வாகனங்களை இந்த யானை துரத்துவதால் அவ்வழியே செல்லும் வாகனங்களில் செல்வோா் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.