மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
பெருந்துறை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நெசவுத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், கல்லங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (50). நெசவுத் தொழிலாளியான இவா், பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடந்த 28-ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து, பாலகிருஷ்ணன் வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயம் அடைந்த அவா் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையில் இருந்த அவா் சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன்வந்தனா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பாலகிருஷ்ணன் உடலுக்கு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் ஆா்.சண்முகசுந்தரம் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. பாலகிருஷ்ணனுக்கு, பிந்து (40) என்ற மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை.