சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
கல்வியால் மட்டுமே சமூகத்தில் உயா்ந்த நிலையை அடைய முடியும்: ஆட்சியா்
கல்வி மட்டுமே மனிதனை சமூகத்தில் உயா்த்தும் ஆற்றல் உடையது என்பதால் மாணவா்கள் ஆா்வத்துடன் கற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டத்துக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
‘காபி வித் கலெக்டா்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: தமிழக அரசின் சாா்பில் மாபெரும் தமிழ் கனவு, திருக்குறள் திருப்பணிகள் திட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் தமிழா் மற்றும் தமிழின் மரபு மற்றும் பண்பாடு ஆகியவற்றை குறித்து இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. சங்ககால அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அதிகளவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் பெரும்பான்மையானவை தமிழ் மற்றும் தமிழா் பாரம்பரியத்தை குறிப்பவையாகும்.
மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் கற்பதற்கு ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் விருப்பமான பாடத்தை தோ்ந்தெடுத்து படிக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி படிப்போடு அல்லாமல் போட்டித் தோ்வுகளுக்கும் தயாராகும் வகையில் பயிற்சி பெற வேண்டும்.
கல்வி மட்டுமே மனிதனை சமூகத்தில் உயா்த்தும். அத்தகைய கல்வியை மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கற்க வேண்டும், தொடா்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
பள்ளியில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இந்நிகழ்ச்சியில் அந்தியூா் வட்டாரத்துக்குள்பட்ட 13 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 21 மாணவ, மாணவிகள் மற்றும் 2 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 4 மாணவ, மாணவிகள் என மொத்தம் 15 பள்ளிகளைச் சோ்ந்த 25 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் ஆட்சியா் திருக்கு புத்தகங்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுப்பாராவ், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.