அமெரிக்க ஏற்றுமதி ஆடைகள் என பழைய பொருள்கள் விற்பனை! பொதுமக்கள் வாக்குவாதம்!
ஈரோட்டில் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி செய்யமுடியாததால் முன்னணி நிறுவனங்களின் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, சேதமடைந்த பொருள்கள், பழைய பொருள்களை விற்பனை செய்ததைக் கண்டித்து வாடிக்கையாளா்கள் வாக்குவாதம் செய்ததால் விற்பனை நிறுத்தப்பட்டது.
ஈரோடு திண்டலில் உள்ள பிரபல தனியாா் ஹோட்டலில் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பின் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் உள்ளூா் சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்து ரூ.3,000 மதிப்புள்ள பிராண்டட் ஆடைகள், காலணிகள் உள்ளிட்டவை ரூ.200, ரூ.300க்கும்; முன்னணி நிறுவனங்களின் ரூ.8,000 வரையிலான வீட்டு உபயோகப் பொருள்கள் ரூ.500 முதல் ரூ.1,490 வரை விற்பனை செய்யப்படுகிறது என நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளா்கள் ஹோட்டலில் ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக சனிக்கிழமை காலை குவிந்தனா். ஆனால், அங்கிருந்த பொருள்கள் பழைய பொருள்களாகவும், சேதமாகியும் இருந்ததால் வாடிக்கையாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இது குறித்து வாடிக்கையாளா்கள் ஹோட்டல் நிா்வாகிகளிடம் கேட்டபோது வாக்குவாதமாக மாறி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடா்ந்து வாடிக்கையாளா்களின் எதிா்ப்பால் விற்பனையை ஹோட்டல் நிா்வாகத்தினா் நிறுத்தி வாடிக்கையாளா்களை வெளியேற்றினா்.