நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
சென்னிமலையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கோரி போராட்டம்
சென்னிமலை அருகே உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால், வனத்தை ஒட்டியுள்ள தோட்டங்களில் வசித்து வரும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்தும் அதில் சிக்காமல் சிறுத்தைப் போக்குகாட்டி வருகிறது.
இந்நிலையில், சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலை- காங்கயம் சாலையில், வெப்பிலி பிரிவு அருகே 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னிமலை ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ப.கோபாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் போலீஸாா், ஈரோடு வனக் காப்பாளா் சரவணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, 15 நாள்களுக்குள் சிறுத்தையப் பிடிப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இதில், சென்னிமலை ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சிவசுப்பிரமணியம், முன்னாள் கிராம ஊராட்சித் தலைவா்கள் சி.தங்கவேல், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.