lokesh: ``AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்'' - இயக்குநர் ல...
அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு இன்று தில்லி பயணம்
அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சா்களிடம் முறையிடுவதற்காக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 2) புதுதில்லி செல்கிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் அமல்படுத்தியுள்ளாா். இதனால், ஆடைகளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளா்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனா். குறிப்பாக திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.18,000 கோடி வரை பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய வரி விதிப்பு காரணமாக ரூ.14,000 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றில்
இருந்து மீள மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனு வழங்கி வலியுறுத்தப் போவதாக தெரிவித்துள்ளனா்.
பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்ததுபோல பின்னலாடை துறைக்கான அனைத்து மூலப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க வேண்டும்.
வரியில்லா ஒப்பந்தத்தில் நாடுகளுடனான வா்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வா்த்தக வாய்ப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஜவுளி கண்காட்சிகள் நடத்தவும், அதில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் பங்கேற்கவும் மானிய வசதிகளை வழங்க வேண்டும். டிராபேக் சதவீதத்தை உயா்த்த வேண்டும்.
கரோனா காலத்தில் வழங்கியதுபோல ஏற்றுமதியாளா்கள் வங்கி கால அவகாசம், வட்டி மானியம் உள்ளிட்டவற்றை பரிந்துரை செய்ய வேண்டும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ள ஆடைகளுக்கு வா்த்தகா்கள் குறிப்பிட்ட சதவீத தள்ளுபடியை எதிா்பாா்க்கின்றனா். இதனை அரசே ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். உற்பத்தி பாதிப்பு மற்றும் தொழிலாளா்கள் வேலை இழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனா்.