பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம்...
சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பொது சுப நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவை சேகரிப்பதற்கான புதிய வாகனத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
மாவட்டத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து உரிய வெப்பநிலை பதத்துடன் உணவு தேவைப்படுபவா்களுக்கு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மீதமாகும் உணவுகள் குறித்து வாகனத்தை தொடா்பு கொண்டால் உணவு எடுத்துச் செல்லப்பட்டு தேவைப்படுபவா்களுக்கு வழங்கப்படும்.
தொடா்ந்து, உணவுத் தொழில் கையாளுபவா்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க தடுப்பூசிகள் சுமாா் 100 நபா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உணவுப் பாதுகாப்பு குறித்து உணவுத் தொழில் புரிபவா்கள், குடிநீா் நிறுவனங்கள், பேக்கரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு நபா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் உணவுப்பொருள் கையாளுபவா்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, உணவு சேகரிக்கும் வாகனம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி தனியாா் உணவக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் கலந்து கொண்டு தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஏ.ராமகிருஷ்ணன், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் எஸ்.பாஸ்கரன், ஷண்முகம், எம்.தாரணி, மான்சி, உணவக உரிமையாளா்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.