கல்வராயன்மலையில் 750 கிலோ வெல்லம், துப்பாக்கி பறிமுதல்!
கல்வராயன் மலைப் பகுதியில் விவசாய விளைநிலப் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ வெல்லம், நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரியாலூா் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் சனிக்கிழமை கல்வராயன் மலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, தாழ்தொரடிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் வீட்டில் வெல்லம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்று வெள்ளையன் (60) வீட்டில் 15 சாக்கு மூட்டைகளில் இருந்த 750 கிலோ வெல்லம், உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வெள்ளையனை கைது செய்தனா். மேலும், தலைமறைவான அவரது மகன் சுப்பிரமணியை தேடி வருகின்றனா்.