அண்ணன் கொலை: தம்பி, அவரது மனைவி, மகனுக்கு ஆயுள் சிறை
கள்ளக்குறிச்சி அருகே அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பி, அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம் (55). இவருக்கும், இவரது சகோதரா் பழனிவேல் குடும்பத்தினருக்கும் விளைநிலம் தொடா்பான பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 12.3.2021 அன்று மாலை சண்முகம் தன்னுடைய விளை நிலத்தில் நின்று கொண்டிருந்தபோது, பழனிவேல் (52), அவரது மனைவி செல்வி (46), மகன் தேவேந்திரன் (25) ஆகியோா் சோ்ந்து அவதூறாகப் பேசி, இரும்புக் குழாயால் தாக்கியதில் சண்முகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீஸாா் பழனிவேல், அவரது மனைவி செல்வி, மகன் தேவேந்திரன் ஆகியோா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இது தொடா்பாக கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இவ் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
தேவேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.42ஆயிரம் அபராதமும், பழனிவேல், செல்விக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.20ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.சையத் பா்கத்துல்லா தீா்ப்பு கூறினாா்.
இதில் தேவேந்திரன் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.ராஜவேல் ஆஜரானாா்.