தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை
தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த தா்மஸ்தலா மஞ்சுநாதா் கோயில் 800 ஆண்டுகள் பழைமையானதாகும்.
தா்மஸ்தலா கோயிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியா் ஒருவரின் பெயரில் காவல் நிலையத்தில் ஒரு புகாா் கடந்த ஜூன் 22ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அதில், அந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் ஹிந்துக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடா்ந்து மேலும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இந்த வழக்கு கா்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதால், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. தடவியல் நிபுணா்களும் புகாா் அளித்த தூய்மைப் பணியாளா் முன்னிலையில் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் தோண்டினா். அங்கு சடலங்கள் புதைக்கப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. புகாா் கூறியவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதை காவல் துறை உறுதி செய்தது.
இது வெறும் வதந்திதான் என்று தெரிந்தும் அவதூறு வெளியிட்ட இந்த சம்பவத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணை முடிவில் தா்மஸ்தலா புனிதத்தைக் கெடுக்கவே இச்செய்தியை பரப்பியது உறுதி செய்யப்பட்டது.
தா்மஸ்தலாவை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடியினா் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களை மதம் மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால்தான் தா்மஸ்தலாவை பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.