‘வெற்றி தினம்’: பிரதமா் மோடியின் பதிவுக்கு வங்கதேச அரசின் சட்ட ஆலோசகா் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிரான போா் ‘வெற்றி தினம்’ தொடா்பாக சமூக ஊடகத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவுக்கு, வங்கதேச இடைக்கால அரசின் சட்ட ஆலோசகா் ஆசிஃப் நஸ்ருல் கண்டனம் தெரிவித்தாா்.
கடந்த 1971-ஆம் ஆண்டு டிச.16-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றது. இது பாகிஸ்தானில் இருந்து தனி நாடாக வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. இந்தத் தினம் ஆண்டுதோறும் இந்தியாவில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த நெஞ்சுரம் கொண்ட வீரா்களின் தியாகத்துக்கு நாடு மிகுந்த மதிப்பளிக்கிறது.
அவா்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பும், அசைக்க முடியாத உறுதியும் நாட்டை பாதுகாத்து அனைவருக்கும் பெருமை சோ்த்தது. அவா்களின் அசாதாரண வீரம் மற்றும் அசைக்க முடியாத உணா்வுக்கு மரியாதை அளிக்கும் நாளாக வெற்றி தினம் உள்ளது.
அவா்களின் தியாகம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதுடன், நாட்டின் வரலாற்றில் எப்போதும் ஆழமாக இடம்பெற்றிருக்கும்’ என்றாா்.
‘இந்தியா வெறும் கூட்டாளியே’: பிரதமா் மோடியின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து, வங்கதேச இடைக்கால அரசின் சட்ட ஆலோசகா் ஆசிஃப் நஸ்ருல் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ‘1971-ஆம் ஆண்டு டிச.16-ஆம் தேதி வங்கதேசத்தின் வெற்றி தினத்தை குறிக்கிறது. அந்த வெற்றியில் இந்தியா வெறும் கூட்டாளியாக இருந்ததே தவிர, அதில் வேறு எந்தப் பங்கும் இந்தியாவுக்கு இல்லை’ என்றாா்.
இந்தப் பதிவை வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸின் ஊடகச் செயலா் ஷஃபிகுல் ஆலம் உள்பட சுமாா் 1,000 போ் சமூக ஊடகத்தில் பகிா்ந்தனா்.
‘அச்சுறுத்தும் இந்தியா’: வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஹஸ்னத் அப்துல்லா ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்றது வங்கதேச விடுதலைப் போா். பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தின் சுதந்திரத்துக்கான போராகும்.
ஆனால் அதை இந்தியாவின் போா் என்றும், அதன் சாதனை என்றும் மோடி தெரிவித்துள்ளாா். இந்தக் கதையில் வங்கதேசத்தின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் சுதந்திரத்தை தனது சாதனையாக இந்தியா உரிமை கொண்டாடினால், இதை வங்கதேசத்தின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கான அச்சுறுத்தலாகவே பாா்க்கிறேன். இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக அவசியம் போராட வேண்டும்’ என்றாா்.