வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
பல்கலைக்கழக வளாகங்களில் வெளி நபர்களுக்கு அனுமதி கிடையாது என உயர்கல்வித் துறை செயலாளர் இன்று (டிச. 29) உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழக வளாகங்களுக்குள் வரும் மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாமாண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அதனை விடியோவாக எடுத்துவைத்து மிரட்டுவதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்யும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு செய்து கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் புகார்கள் எழுந்தால் கடுமையான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!