பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி 0.9% சரிவு!
வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்கு தண்ணீா் வரத்து
திருமூா்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது.
உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உள்ளது. 1980 -ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த பரப்பளவு 510 ஏக்கா். அணையின் இரண்டு கால்வாய்கள் மூலம் 6,040 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். அணை கொள்ளளவு 24.75 அடி.
போதிய நீா்வரத்து இல்லாத நிலையில் ஓடையில் வரும் மழைநீரை நம்பி அணை கட்டப்பட்டதால், கடந்த 43 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. தற்போது, அணைப் பகுதி விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளுக்கு கூட குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனா்.
அரசாணையில் தெரிவித்துள்ளபடி, திருமூா்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் அணைக்கு தண்ணீா் கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனா். தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனிடமும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் கள்ளிப்பாளையம் மதகிலிருந்து வட்டமலை அணைக்கு கடந்த புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. அங்கிருந்து 37 கிலோ மீட்டா் தொலைவில் வழியிலுள்ள பல்வேறு சிறு நீா்த் தேக்கங்களை நிரப்பிய தண்ணீா் தற்போது வட்டமலை அணைக்கு வந்து சோ்ந்தது.
ஜனவரி 18-ஆம் தேதி வரை பத்து நாள்களுக்கு மொத்தம் 240 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. தண்ணீரை வரவேற்கும் விதமாக செட்டிபாளையம் அருகே அணை நீா்வழிப் பகுதியில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினா்.