``நான் பேசிய வீடியோ இதுதான்.. திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்'' -சுரேஷ...
வேங்கை வயல் விவகாரம்: `வன்கொடுமை வழக்கல்ல...' - சிபிசிஐடி மனுவை ஏற்ற நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் நடைப்பெற்று மூன்றாவது ஆண்டும் தொடங்கிவிட்டது. ஆனால், இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதற்கிடையில், 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை, டி.என்.ஏ பரிசோதனை, 5 பேர்களிடம் குரல் மாதிரி சோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் மூன்று நபர்கள் ஈடுபட்டதாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த 20 -ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மற்றொருபுறம், ‘பாதிக்கப்பட்ட எங்களில் மூன்று பேரை குற்றவாளியாக்குவதா?’ என்று வேங்கைவயலைச் சேர்ந்த மக்கள் ஊரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், ’வேங்கை வயல் தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது‘ எனக் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதேபோல், இந்த சம்பவம், தொடர்பான வழக்கில், 'இதில் குற்றம்சாட்டப்பட்ட மூவருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், இந்த வழக்கிலிருந்து வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கியிருக்கிறோம். எனவே, இந்த வழக்கை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும்' எனக் கோரி சி.பி.சி.ஐ.டி. மனுத்தாக்கல் செய்தது. இரு தரப்பிடமும் தீவிர விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி தரப்பு மனுவை ஏற்று, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டிருக்கிறது.