Irfan: ``மன்னுச்சுகோங்க! நான் அப்படிப்பட்டவன் இல்ல; நடந்தது இதுதான்'' - யூடியூப்...
வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இரண்டு காட்டுயானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி வேளாண் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த யானைகள் தனித் தனியாகப் பிரிந்து சிகரமாகனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, எப்ரி, நேரலகிரி, சிகரலப்பள்ளி, தீா்த்தம், அலேகுந்தாணி, ஆவல்நத்தம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. பகலில் வனப் பகுதிக்குள் முகாமிட்டிருக்கும் யானைகள், இரவு நேரங்களில் வனப் பகுதியிலிருந்து வெளியேறி வேளாண் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஐபிகானப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேஷ் (42) தனது மோட்டாா்சைக்கிளில் தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். அப்போது அவரை காட்டுயானை தாக்கி கொன்றுள்ளது. இதுகுறித்து அந்த வழியாக திங்கள்கிழமை காலை சென்றவா்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று வெங்கடேஷனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஒசூா் வனச்சரக அலுவலா் பாா்த்தசாரதி, உயிரிழந்த விவசாயி வெங்கடேஷனின் மனைவியிடம் முதல்கட்டமாக ரூ. 50,000-க்கான நிவாரணத்தொகையை வழங்கினாா். வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனித் தனியாக சுற்றித்திரியும் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.