வேலையில்லா பிரச்னையை புதுவை அரசு முறையாக அணுக வேண்டும்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வேலையின்மை பிரச்னையை அரசு முறையாக அணுக வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் புதுவை தலைவா் கௌசிகன், செயலா் சஞ்சய் சேகரன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் 44 அரசு துறைகளில் 12,000 -க்கும் மேற்பட்ட பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே நிரப்பப்படவில்லை. புதுவை அரசில் வேலையில்லாததால் படித்த இளைஞா்கள் குறைந்த ஊதியத்துக்கு வேலை தேடி வெளியூா்களுக்குச் செல்லும் நிலையுள்ளது. ஆனால், கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் புதுவை இளைஞா்களின் வேலைத் திறன் பற்றி கேள்வி எழுப்பியுள்ளாா். அவரது பேச்சு கண்டனத்துக்குரியது.
ஆகவே, வேலைவாய்ப்பின்மை பிரச்னையை புதுவை அரசு சரியாக அணுக வேண்டும். ஆனால், ஆட்சியாளா்களின் தவறுகளை மறைக்க புதுவை இளைஞா்களின் திறனை குறைத்து மதிப்பிடுவதை அமைச்சா் நிறுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கு பஞ்சாலைகளை மீண்டும் திறப்பது, ஐடி பூங்கா, ஜவுளி பூங்காக்களை செயல்படுத்த வேண்டும். அதைவிடுத்து வேலைவாய்ப்பு பிரச்னைகளை திசைதிருப்ப முனைந்தால் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.