வேளாண்மை, மீன் வளத்தில் தமிழகம் முதலிடம்! அரசு தகவல்
வேளாண்மை, பால் வளம், மீன் வளம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதலாண்டிலேயே வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில், தொடா்ந்து 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப்பட்டு, மொத்தம் ரூ.1,94,076 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய பல திட்டங்கள் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படுகின்றன.
முதல்வரின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளா்ச்சி 2021 முதல் 2024 வரை 5.66 சதவீதமாக உயா்ந்து சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாது கேழ்வரகு, கொய்யா உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தித் திறனில் இரண்டாம் இடத்தையும், வோ்க்கடலை, தென்னை உற்பத்தித் திறனில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது தமிழகம்.
அதேபோல, 2020- 2021-இல் 36.07 லட்சம் ஹெக்டோ் என இருந்த பாசனப் பரப்பு, 2023 - 2024-இல் 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 10,187 கிராம ஊராட்சிகளில், ரூ.786.86 கோடியில் 47,286 ஏக்கா் தரிசு நிலங்கள் மீள் சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டன.
213 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேசிய வேளாண் சந்தை தளத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். வேளாண்துறை இயந்திரமயமாக்குதல் திட்டப்படி ரூ. 499.45 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் மானியங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், முதல்வரின் உத்தரவுப்படி, 27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ரூ.1,212 கோடியில் சீரமைக்கப்பட்டன. சிறு விவசாயிகளும் பயன்பெற்று வேளாண் உற்பத்திகளைப் பெருக்கிட 814 சிறுபாசன ஏரிகள் ரூ 75.59 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு விவசாய வளா்ச்சிக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் 24 மாவட்டங்களில் 88 தடுப்பணைகள் ரூ.519 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டன. அவை நிலத்தடி நீா் பராமரிக்கப்படவும் உதவுகின்றன.
பால்வளம்: பால் வளத்தை பெருக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதன் பயனாக முந்தைய ஆட்சியில் (2018-19) 8,362 மெட்ரிக் டன் இருந்த பால் உற்பத்தி கடந்த 2023- 24 இல்10,808 மெட்ரிக் டன்னாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, அரசு கோழிப் பண்ணைகளுக்கு அளித்துவரும் ஊக்கத்தின் பயனாக முந்தைய ஆட்சியைக் காட்டிலும் ஏறத்தாழ 350 கோடி முட்டைகள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மீனவா் நலன் காக்க ரூ.1,428 கோடி மதிப்பில் 72 மீன் இறங்கு தளங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடி, ராமேசுவரம், திருவொற்றியூா் குப்பம் ஆகிய பகுதிகளில் மீன்பிடித் தொழில்கள் சிறக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வேளாண்மை, கால்நடை வளா்ப்பு, மீனவா் நலன் என ஒவ்வொரு துறைக்கும் சிறப்பு கவனம் அளிப்பதால் எங்கும், எதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.