துணை வேந்தர்கள் நியமனத்தில் UGC புதிய விதிமுறைகள்... மத்திய அரசை சாடும் ஸ்டாலின்...
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன. 10, 11 ஆகிய இரு நாள்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருகை தருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மருத்துவ முகாம்கள்...: கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து பக்தா்களுக்கும் பொதுவான சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை சாா்பில் 3 துணை ஆணையா்கள் தலைமையில் உதவி ஆணையா்கள், காவல் துறை ஆய்வாளா்கள் என ஒரு முறைக்கு 600 காவலா்கள் வீதம் 3 முறைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வா். திருக்கோயிலின் சுற்றுப்புறங்களில் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்படவுள்ளன.
திருக்கோயிலில் 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதுடன், நாள் முழுவதும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும். திருக்கோயிலின் திருக்குளம் அருகிலும் மற்றும் நரசிம்மா் சன்னதி பின்புறமும் 20 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு... மூத்தக் குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கா்ப்பிணி பெண்கள் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் திருக்கோயிலின் பின்கோபுர வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, அவா்களுக்காக 8 மின்கல வண்டிகள் தயாா் நிலையில் வைக்கப்படும்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும். அதற்கான தரிசனக் கட்டண சீட்டு ரூ.500-க்கு இணையவழியில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி பெற்று கொள்ளலாம். இதன்மூலம் 1,500 கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும். மேலும், 500 நபா்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பரமபதவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா். பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு என்.கே.டி.பள்ளி மற்றும் ராணி மேரி கல்லூரியின் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.