வைகை கரையிலிருந்து தொடங்குகிறது தென்னிந்திய வரலாறு: இரா.சச்சிதானந்தம் எம்.பி.
வைகை கரையிலிருந்து தென்னிந்திய வரலாறு தொடங்குகிறது என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் 2 நாள்கள் நடைபெறும் ‘வைகை இலக்கியத் திருவிழா-2025‘ வியாழக்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் இந்த விழா திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு.கோட்டைக்குமாா் முன்னிலை வகித்தாா்.
மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டு பேசியதாவது:
தென்னிந்திய வரலாறு வைகை நதியின் கரையிலிருந்தே தொடங்குகிறது. இதை உறுதி செய்வதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. கீழடி அகழாய்வுகள் மூலம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொன்மையான நாகரிகம், பண்பாடு, கலாசாரம் நிறைந்த பகுதியாக தமிழகம் இருந்திருக்கிறது என்பது தற்போது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல் மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாசாரமும் தொன்மை வாய்ந்ததாக உள்ளது. புத்தகக் கண்காட்சிகள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துகிறது. இதேபோல, இலக்கியங்களைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகளை வைகை இலக்கியத் திருவிழா ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.
ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பேசியதாவது:
வைகை இலக்கியத் திருவிழா, பண்பாட்டரங்கம், வரலாற்றரங்கம் என 2 அரங்கங்களுடன் இரு நாள்கள் நடைபெறுகிறது. மேலும், புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, இலக்கியச் சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை பொழிவு, புகழ்பெற்ற எழுத்தாளா்களின் கதை, கட்டுரை, நூல் திறனாய்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வினாடி-வினா போட்டியும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியின் போது பரிசு வழங்கப்படும். இலக்கியம்தான் ஒரு மனிதனைப் பண்படுத்தும். மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆா்வத்தை உருவாக்கும் நோக்கில்தான் இந்த இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது என்றாா் அவா்.
விழாவில் பொது நூலக இயக்ககத்தின் இணை இயக்குநா் ச.இளங்கோ சந்திரகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஹா.சேக் முகையதீன், உதவி ஆட்சியா்(பயிற்சி) ராஜேஸ்வரி சுவி, மாவட்ட நூலக அலுவலா் இரா.சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.