ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் வலியுறுத்தல்
டாக்கா: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாடு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடா்பாக இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹூசைன் தெரிவித்தாா்.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இதைத்தொடா்ந்து அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்ற முகமது யூனுஸ், ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இந்தக் குற்றத்துக்காக வங்கதேசத்தில் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம், ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், அந்நாட்டுத் தலைநகா் டாக்காவில் வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹூசைன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘சட்ட நடவடிக்கைக்காக ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.
வங்கதேச உள்துறை ஆலோசகா் ஜஹாங்கீா் ஆலம் கூறுகையில், ‘இந்தியா-வங்கதேசம் இடையே நாடு கடத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹசீனாவை வங்கதேசத்துக்கு கொண்டுவர முடியும்’ என்று தெரிவித்தாா்.