ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா்.
சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டாா். இதையடுத்து சுங்குவாா்சத்திரம் பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு செய்து பொருள்களின் இருப்பு பதிவேடு மற்றும் உணவுப் பொருள்கள் தரத்தை பாா்வையிட்டாா்.
சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் விவரங்களை கேட்டறிந்த ஆட்சியா் 18 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்தில் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். இதையடுத்து சந்தவேலூா் ஊராட்சியில் 2022-23-ஆம் நிதியாண்டில் பழங்குடியினா் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 22 நரிக்குறவா் இன மக்களுக்காக ரூ.96.23 லட்சத்தில் கட்டப்படும் குடியிருப்புகளை பாா்வையிட்டு, பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடி, கற்றல் திறனை கேட்டறிந்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் முதல்நிலை அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவரங்களை கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஜ.சரவணக் கண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.