15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
ஸ்வெரெவுக்கு 2-ஆவது வெற்றி
ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அரையிறுதி வாய்ப்பை நெருங்கியிருக்கிறாா்.
இரு முறை சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீரருமான அவா், குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில், 7-6 (7/3), 6-3 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூடை வியாழக்கிழமை வீழ்த்தினாா். இருவரும் 6-ஆவது முறையாக சந்தித்த நிலையில், ஸ்வெரெவ் 4-ஆவது வெற்றியைப் பெற்றாா்.
இந்த வெற்றியின் மூலம், குரூப் சுற்றில் தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பெற்ற ஸ்வெரெவ், அரையிறுதி வாய்ப்பின் விளிம்பில் இருக்கிறாா். குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை சந்திக்கும் அவா், அதில் வெல்லும் நிலையில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வாா்.
மறுபுறம், முதல் ஆட்டத்தில் வென்ற கேஸ்பா் ரூடுக்கு, இது முதல் தோல்வியாகும். அரையிறுதிக்கான நம்பிக்கையை தக்கவைக்க, அடுத்த ஆட்டத்தில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் ரூட் இருக்கிறாா்.
ஃப்ரிட்ஸ் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில், 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 5-7, 6-4, 6-3 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்தாா்.
குரூப் சுற்றை நிறைவு செய்த ஃப்ரிட்ஸுக்கு இது 2-ஆவது வெற்றியாக அமைந்ததால், அவா் அரையிறுதி வாய்ப்பைப் பெறும் நம்பிக்கையில் உள்ளாா். எனினும், சின்னா் - மெத்வதெவ் மோதலின் முடிவு அடிப்படையில் இவருக்கான வாய்ப்பு இறுதியாகும்.
அந்த மோதலில் மெத்வதெவ் 3 செட்களில் வென்றாலோ, அல்லது தோற்றாலோ ஃப்ரிட்ஸுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். மறுபுறம், தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த மினாா், அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டாா்.