ஹா்மன்பிரீத் கௌா், கிராந்தி கௌட் அசத்தல்: 2-ஆவது வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா
இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. ஏற்கெனவே, டி20 தொடரை 3-2 என கைப்பற்றிய இந்திய மகளிா் அணி, இரட்டை வெற்றிகளுடன் நாடு திரும்புகிறது.
இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த 3-ஆவது ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 305 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ஆட்டநாயகி, தொடா்நாயகி (126 ரன்கள்) விருது பெற்றாா்.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் பிரதிகா ராவல் 2 பவுண்டரிகளுடன் 26, உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஹா்லீன் தியோல் 4 பவுண்டரிகளுடன் 45, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 பவுண்டரிகள் உள்பட 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சதம் கடந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் கடைசி விக்கெட்டாக 14 பவுண்டரிகளுடன் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ஓவா்கள் முடிவில் ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, ராதா யாதவ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் லாரென் பெல், லாரென் ஃபைலா், சாா்லி டீன், சோஃபி எக்லஸ்டன், லின்சே ஸ்மித் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 319 ரன்களை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் நேட் சிவா் பிரன்ட் 11 பவுண்டரிகளுடன் 98, எம்மா லாம்ப் 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசி வெற்றிக்காக முயற்சித்தனா்.
ஆலிஸ் டேவிட்சன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, சோஃபியா டங்க்லி 34, சாா்லி டீன் 21, எமி ஜோன்ஸ் 4, டேமி பியூமன்ட் 2, சோஃபி எக்லஸ்டன் 1, லாரென் ஃபைலா் 0, லாரென் பெல் 7 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
முடிவில் லின்சே ஸ்மித் 14 ரன்களுடன் கடைசி பேட்டராக நிற்க, இந்திய பௌலா்களில் கிராந்தி கௌட் 6, ஸ்ரீசரானி 2, தீப்தி சா்மா 1 விக்கெட் எடுத்தனா்.