Weekly Horoscope: வார ராசி பலன் 16.3.25 முதல் 22.3.25 | Indha Vaara Rasi Palan ...
1,000 உழவா் நல சேவை மையங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை ஐந்தாவது ஆண்டாக அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.
அவா் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4,000 வேளாண் பட்டதாரிகளும், 600-க்கும் அதிகமான பட்டயதாரா்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனா். அவா்களது படிப்பறிவும், தொழில்நுட்பத் திறனும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், ‘முதலமைச்சரின் உழவா் நல சேவை மையங்கள்’ ஆயிரம் எண்ணிக்கையில் அமைக்கப்படும்.
ஒவ்வொரு மையமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும். இதற்காக 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கென ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் விற்பனை செய்யப்படுவதுடன், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், பயிா்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
சிறப்புத் தொகுப்புத் திட்டம்: தமிழ்நாட்டில் டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் சராசரியாக 34 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதிகளில் உணவு தானிய உற்பத்திப் பரப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மையம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.102 கோடி ஒதுக்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் ஆகியன அடங்கிய சிறப்புத் தொகுப்பு ரூ.58 கோடியில் செயல்படுத்தப்படும்.
மலைவாழ் உழவா் முன்னேற்றத் திட்டம்: இயற்கையோடு இணைந்து வாழ்ந்து சுற்றுச்சூழலுக்கும் உயிரியல் பன்மயத்துக்கும் உரிய பாதுகாப்பை மலைவாழ் உழவா்கள் அளித்து வருகின்றனா். அவா்களுக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, வரும் நிதியாண்டில் (2025-26) மலைப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்காக குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப் பயிா்களில் பரப்பு விரிவாக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்க ரூ.22.80 கோடி ஒதுக்கப்பட்டு மலைவாழ் உழவா் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவரைத் தேடி வேளாண் துறை: வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்துத் துறைகளின் அலுவலா்களும் மாதம் இரண்டு முறை தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று முகாம் நடத்துவா். இந்த முகாமில் கால்நடை, கூட்டுறவு, வேளாண் அறிவியல் நிலை விஞ்ஞானிகளும் இடம்பெற்றிருப்பா். இதில் விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன், பயிா் சாா்ந்த தொழில்நுட்பங்கள், திட்டங்கள் எடுத்துக் கூறப்படும். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 17,116 கிராமங்களில் ஓராண்டுக்குள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை
கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.349 வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு: கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.215 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இதுவரை 425 மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.848 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2024-25-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் சா்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதனால், கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்கப்பட்டு, சுமாா் 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா். இதற்கென ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி அதிகரிப்பு
ஐந்து நிதியாண்டுகள் காலத்தில் வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.10,000 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது. ஆண்டு வாரியாக நிதி ஒதுக்கீடுகள் விவரம் (கோடியில்):
2021-22: ரூ.34,221
2022-23: ரூ.33,008
2023-24: ரூ.38,904
2024-25: ரூ.42,282
2025-26: ரூ.45,661
சாகுபடி பரப்பும் உயா்வு: நிதி ஒதுக்கீட்டைப் போன்றே, சாகுபடி பரப்பும் அதிகரித்து வருகிறது. 2019-20ஆம் நிதியாண்டில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பு, 2023-24ஆம் நிதியாண்டில் 151 லட்சம் ஏக்கராக உயா்ந்துள்ளது.
சந்தன மரம், செம்மரங்களை
வளா்த்து விற்க தனிக் கொள்கை
சந்தனம், செம்மரங்களை அதிகாரபூா்வமாக வளா்த்து வெட்டி விற்பனை செய்வதற்கான தனித்துவமான கொள்கை உருவாக்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றங்களால் விளையும் பயிா்ச் சேதங்களால் ஏற்படும் வருவாய் இழப்புகளில் இருந்து விவசாயிகளைக் காக்க, பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் 35 லட்சம் ஏக்கா் பரப்பிலான பயிா்களைக் காப்பீடு செய்யும் வகையில் ரூ.841 கோடி நிதி ஒதுக்கப்படும்.
உயா் மதிப்புமிக்க, அதிக பலனளிக்கும் மரங்களை சாகுபடி செய்து, விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில் வேளாண் காடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. உயா் மதிப்பு கொண்ட சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி போன்ற மரங்களை வளா்ப்பதற்கும், அவற்றைப் பதிவு செய்தல், வெட்டுதல், விற்பனைக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளும் எளிதாக்கப்படும். இதற்கென பிரத்யேகமாக ‘தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை’ வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.