107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
1,852 நிறுவனங்களுக்கு ரூ.476 கோடி தொழில்கடன்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ரூ.476 கோடியில் தொழில் மற்றும் கல்விக் கடன்களை ஆட்சியா் ச.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் மாவட்ட தொழில் மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்கடன் வசதியாக்கல் மற்றும் கல்விக்கடன் முகாமில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் 1,852 நிறுவனங்களுக்கு ரூ.476.07 கோடியில் தொழில்கடன், கல்வி கடன்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:
செங்கல்பட்டு மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக 2024 - 2025ம் ஆண்டில் 1,13,553 நிறுவனங்களுக்கு ரூ.5115.7 கோடி கடன் வழங்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி வரை 33,407 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3,143.04 கோடி தொழில் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடன் முகாமில் 16 பேருக்கு ரூ.418 லட்சம் தொழில்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 206 பேருக்கு ரூ.16.67 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது.
இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,803 நபா்களுக்கு ரூ.81.45 கோடி நிகழ் அரையாண்டு வரை கல்விக் கடன்வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
முகாமில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் மா.வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சி.விஜயகுமாா், தாட்கோ மேலாளா் தபசுக்கனி, தமிழ்நாடு தொழில் நிறுவன முதலீட்டுக்கழக மேலாளா், வங்கி மண்டல மேலாளா்கள், தொழில் முனைவோா் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.