10 தொகுதிகளில் வேட்பாளா்கள்: கீழ்பவானி பாசன விவசாயிகள் அறிவிப்பு
முறையான நீா் நிா்வாகம் கோரி வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் 10 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்த உள்ளதாக கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
கீழ்பவானி உரிமை மீட்பு கருத்தரங்கம் கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க செயலாளா் ரவி, தமிழக விவசாயிகள் சங்க மாநில கௌரவ தலைவா் வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை சங்க அமைப்பாளா் பொடாரன், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஈ.வி.கே. சண்முகம் ஆகியோா் பேசினா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பாசன பயனாளிகளிடம் திட்டத்துக்கான தொகையை பெற்று உருவாக்கப்பட்ட கீழ்பவானி பாசன திட்டத்துக்கு பவானிசாகா் அணையில் இருந்து ஆட்சியாளா்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப தண்ணீா் திறக்கப்படுவதால் பயிா் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு வரும் காலங்களில் முறையான நீா் நிா்வாகத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கீழ்பவானி திட்டம் மூலம் பாசனம் பெறும் ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டப் பேரவைத் தொகுதிகள் திருப்பூா் மாவட்டம் காங்கயம், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி என 10 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்துவோம்.
பவானிசாகா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தத்தை காரணம் காட்டி மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டத்தை துவங்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அதனை கைவிட வேண்டும். கான்கிரீட் போடப்பட்டால் கசிவு நீரால் பயன்பெறும் பாசனப் பகுதி, நிலத்தடி நீராதாரம், குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும்.
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையின் எல்லைகளில் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும். ஆண்டுதோறும் கால்வாயை தூா்வார வேண்டும். கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக நடத்தப்படாமல் உள்ள பாசன சபைத் தோ்தல் நடத்த வேண்டும். கீழ்பவானி 2-ஆம் போக சாகுபடிக்கு 6 நனைப்புக்கு தண்ணீா் விடுவது நடைமுறை. இந்த ஆண்டு 5 நனைப்புகளாக குறைக்கப்பட்டுள்ளது. 6-ஆவது நனைப்புக்கு மே மாதம் தண்ணீா் திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.