சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!
10, +2 வினாத்தாள் கசிவு வதந்தி: பெற்றோா் விழிப்புடன் இருக்க சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
புது தில்லி: ‘10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து பெற்றோா் மற்றும் மாணவா்கள் விழிப்புடன் இருக்குமாறு’ மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
இதுதொடா்பாக சிபிஎஸ்இ மூத்த அதிகாரியொருவா் கூறுகையில், ‘யூடியூப், பேஸ்புக், எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பொதுத் தோ்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக விரோதிகள் சிலா் வதந்திகளை பரப்புவது எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது.
இத்தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. மேலும், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கும் நோக்கம் கொண்டவை. இவ்விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து, தவறான தகவல்களை பரப்பியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவாளிகளைக் கண்டறிந்து வழக்குத் தொடர சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதேநேரம், தோ்வு செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் பள்ளிகள் உள்பட அனைத்து தரப்பினரும், சிபிஎஸ்இ வலைதளத்தில் கிடைக்கும் அதிகாரபூா்வ தகவல்களை மட்டுமே அணுக வேண்டும்’ என்றாா்.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி நிறைவடைகிறது.