“12 விக்கெட்டுகள்...” ரஞ்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அபாரம்!
ரஞ்சி போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் உள்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன் படி, இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ரவீந்திர ஜடேஜா அபாரம்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, தில்லிக்கு எதிரான போட்டியில் சௌராஷ்டிர அணிக்காக களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது அபார பந்துவீச்சில் தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜாவின் அபார பந்துவீச்சு இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிக்க: ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி; 3 இந்திய வீரர்களுக்கு இடம்!
இந்தப் போட்டியில் சௌராஷ்டிர அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ரஞ்சி கோப்பையில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலரும் பெரிதாக சோபிக்காத நிலையில், ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.