ராகுலுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர். அல்ல; அம்பேத்கருக்கு எதிரானது! காங்கிரஸ்
17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்: தமிழக அரசு ஒப்பந்தம்
தமிழகத்தில் 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தாய்மாா்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களின் குழந்தைகளைக் காக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதற்கான ஒப்பந்தம் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா முன்னிலையில் சிப்காட் நிறுவனம் மற்றும் இந்திய வா்த்தக தொழில் கூட்டமைப்பின் மகளிா் பிரிவு ஆகியவற்றுக்கு இடையே வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே, 13 தொழிற்பூங்காக்களில் 63 குழந்தைகள் காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக ஏறத்தாழ 1.50 லட்சம் தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா். இதைத் தொடா்ந்து, நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்குவது பற்றிய அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, 17 தொழிற்பூங்காக்களில் இந்திய வா்த்தக தொழில் கூட்டமைப்புடன் இணைந்து குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன்மூலம் 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளா்கள் பயன்பெறுவா்.
இதுகுறித்து, தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உருவாக்கும். இதைப் பராமரிக்கும் பணியை இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் மகளிா் பிரிவு மேற்கொள்ளும். இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கி.செந்தில்ராஜ், தொழில் கூட்டமைப்பின் மகளிா் பிரிவு தலைவா் திவ்யா அபிஷேக் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள். குழந்தைகள் காப்பகங்களை அமைப்பதன் மூலம், பெண்களின் தனிப்பட்ட பணிச் சுமையைக் குறைக்க இயலும் என்றாா்.
இந்த நிகழ்வில் தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநா் டி.சிநேகா உள்பட பலா் பங்கேற்றனா்.