``20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால்..." - மநீம 8-வது ஆண்டில் மனம் திறந்த கமல்ஹாசன்
தமிழக அரசியல் வரலாற்றில் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், 2018 பிப்ரவரி 21-ம் தேதி `மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். மாற்று என்று கூறி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக மீது கடும் விமர்சனங்களோடு தனித்துக் களமிறங்கிய கமல்ஹாசன், கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ராஜ்ய சபா எம்.பி சீட் ஒப்பந்தத்தோடு திமுக கூட்டணியில் ஐக்கியமானார்.

இவ்வாறான கடந்த வந்த பாதைகளோடு, மக்கள் நீதி மய்யம் இன்று 8-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நாளில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தனது தொண்டர்களை நேரில் சந்தித்தார். அப்போது, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன், ``நானும் என் கலையும், என் சிந்தனையும் உயிர்த்திருப்பதற்குத் தமிழக மக்கள்தான் காரணம். சில உறவுகள் இரண்டே நாளில் முடிந்துவிடும். நண்பன் என்று சொல்லி வருபவன் எதிரியாகிவிடுவான். ஆனால், உங்களின் அன்பு என்னுடைய உறவாக இருக்கிறது. நம்மை இணைப்பது தமிழ்.
இன்று உலகத் தாய்மொழிகளின் தினம். நம் மொழியின் குரல்வளையைப் பிடிக்க நினைப்பவர்கள் இது எப்படிப்பட்ட தினம் என்பதை உணரவேண்டும். `தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்' என்றார் பாரதிதாசன். அத்தகைய, தமிழை எவராலும் இறக்க முடியாது. நான் பேசும்போது, விமர்சகர்களும், எதிர்க்கட்சியினரும் `தோற்றுப்போன அரசியல்வாதி பேசுகிறார்' என்பார்கள். குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் அரசியலுக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால், வரத் தவறினேன் என்பதுதான் எனக்குத் தோல்வியாகப் படுகிறது. அப்படி நான் வந்திருந்தால், இன்று நான் பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகளும் இடமும் வேறாக இருக்கும்.

எனக்கு காந்தியைப் பிடிக்கும் அளவுக்குப் பெரியாரையும் பிடிக்கும். அவரே காந்தியின் சிஷ்யன்தான். என் அனுபவத்தில் நான் புரிந்துகொண்டது, ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு. எந்த மொழி வேண்டும், வேண்டாம் எனது தமிழனுக்குத் தெரியும். இந்த வருடம் நமது நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது.
மய்யத்தில் மாணவர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள்தான் எதிர்காலம். அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர, நான் சொல்வதைக் கற்றுக் கொள்ளவில்லையென்றால் கைசெலவுக்கு காசு கொடுக்க மாட்டேன் என்கிற ஒரு அரசு, எந்த நிலைக்குத் தள்ளப்படும் என்பதைச் சரித்திரம் சொல்லும். இந்த நாட்டைப் பிரித்தாள முடியாது. அப்படி நினைப்பவர்கள் எல்லாம் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும்.

நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது. மொழிப்போராட்டத்தில் அரை நிஜார் போட்டுக்கொண்டு பங்கெடுத்தவன் நான். இந்த வருடம் குரல் கேட்கும், அடுத்த வருடம் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு உள்ளே செல்வோம். `we will change tamilnadu and then india' " என்று கூறி தொண்டர்கள் வருகைக்கு நன்றி தெரிவித்தார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play