20-இல் வேலூரில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
முன்னாள் படைவீரா்களின் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 20-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் படைவீரா்கள், அவா்தம் கைம்பெண்களின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னாள் படைவீரா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்று தமிழக முதல்வா் தெரிவித்துள்ளாா்.
இந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியமும், கடனுக்கான வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும், இவா்களுக்கு திறன், தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரா்கள், மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின்போது உயிா்நீத்த படைவீரா்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரரை முற்றிலுமாக சாா்ந்திருக்கும் திருமணமாகாத மகள் அல்லது கைம்பெண் மகள் ஆகியோா் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆட்சியா் தலைமையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதாரா்கள் முகாமில் பங்கேற்று, தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, முன்னாள் படைவீரா் அடையாளஅட்டை, படைப்பணிச் சான்று, கல்விச் சான்று, வங்கிக் கணக்கு புத்தகம், தொழில் தொடங்குவதற்கான ஆவணங்கள் ஆகியவற்றின் அசல், நகலுடன் நேரடியாக இந்த முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.