200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ஒட்டன்சத்திரம் அருகே 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட சமுக நலத் துறை சாா்பில், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கள்ளிமந்தையத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு 7 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
இதேபோல, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 101 பேருக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.97 லட்சத்தில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.தொப்பம்பட்டி ஒன்றியத்தில் புதிதாக கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.
மேலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் ரூ.50 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் திறந்துவைத்தும், ரூ.6.19 கோடியில் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிா் திட்டம் ) திட்ட இயக்குநா் சா.சதீஷ்பாபு, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பூங்கொடி, மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் புஷ்பகலா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.